தீரன் சின்னமலை என்னும் எரிமலை
கா ங்கயம், நத்தக்காடையூர் அருகே மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1756ம் ஆண்டு விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தார். அவரது இயற்பெயர் தீர்த்தகிரி. இளம் வயதிலேயே மல்யுத்தம், தடி வரிசை, வில், வாள் பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பவரிடம் கற்றுத் தேர்ந்தார். சின்னமலைபெயர்க்காரணம் பயிற்சி செய்யும் முன், மேலப்பாளையத்தில் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து தினமும் வழிபட்டு வந்தார். கொங்கு நாடு, அப்போது மைசூர் ஆட்சியின் கீழ் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்கு செல்லும் வரிப் பணத்தை எடுத்து, ஏழைகளுக்கு வினியோகித்தார். வரி வசூலித்து சென்ற வரி தண்டல்காரரிடம், தீர்த்தகிரி, 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக சொல்,' என்று சொல்லி அனுப்பினார். அது முதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று. ஆங்கிலேயருக்குசிம்மசொப்பனம் இதே காலகட்டத்தில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய படைகள் ஒன்று சேர்ந்து விடாமல் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். வெள்ளையர் படைக்கு சேதம் ஐதர் அலியின் மறைவுக்கு பின், திப்பு சுல்தான் மைசூரு ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக்கம்பெனியினரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி மைசூரு சென்றார். சின்ன மலையின் படை சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40 ஆயிரம் வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையரின் படைகளுக்கு தீரன் சின்னமலையின் படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. இவ்வளவு சேதத்தை உண்டாக்கிய தீரன் சின்னமலையின் படைகள் தற்போதைய காங்கயம், அறச்சலுார், ஓடாநிலை, பழநி உள்ளிட்ட பகுதி களில் பாசறைகள் அமைத்து போர் பயிற்சி மேற்கொண்டதற்கு வரலாற்று தரவுகள் உள்ளன. போர் பயிற்சி பாசறை காங்கயம் அருகே உள்ள சிவன்மலை அடிவாரப் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் நிலங்களை வாங்கிய தீரன் சின்னமலை படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாசறை ஒன்றை நிறுவியுள்ளார். அங்கு வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்துள்ளார். மேலும், அங்கு அவர் பயன்படுத்திய பாசறையின் சிதைந்த பகுதிகளும் நுழைவு வாயில் இன்றளவும் உள்ளது. தற்போது அவ்விடத்தில் பழைய செங்கற்களை கொண்டு நுழைவு வாயிலும், கருங்கற்களை கொண்டு சுற்றுச்சுவரும் அதைப் பாதுகாக்க சுண்ணாம்பால் காரை பூசப்பட்டுள்ளது. இதுதவிர பாசறை நுழைவுவாயில் பழைய முக்கால் அடி செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. பாசறையின் சுற்றுச்சுவர் மிக நேர்த்தியாகவும் உறுதியுடனும் கட்டப்பட்டுள்ளதை இன்றளவும் காண முடிகிறது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் அவர்களுக்கு வரி செலுத்த முடியாது என மறுத்து அவர்களைஎதிர்த்து மருது சகோதரர்களுடனும் திப்புசுல்தானுடனும் இணைந்து போர் புரிந்து பின்,ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு, 1805ம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் துாக்கிலிடப்பட்டார் தீரன் சின்னமலை. -இன்று தீரன் சின்னமலையின் 220வதுநினைவு தினம்.தீரன் சின்னமலை பிறந்து வளர்ந்த ஊரான, காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலைக்கு நினைவு மண்டபமும் இல்லை, சிலையும் இல்லை. சிறிய கட்டடம் ஒன்றில் தீரன் சின்னமலை படம் வைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு விழாவாக நடைபெறும் மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி நாளன்று ஈரோடு மாவட்டம், சேலம் மாவட்டங்களில் அரசு விடுமுறை தினமாக அறிவித்து நடைபெற்று வருகிறது.சின்னமலையின் பூர்வீ கமான மேலப்பாளையம் பகுதியில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு தீரன் சின்னமலையின், 213 வது நினைவு தினத்திற்கு மேலப்பாளையம் வந் திருந்த அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இங்கு மணி மண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்ததோடு சரி; ஏதும் செய்யவில்லை. அதன்பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வினரும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித முன்னெடுப்பும் இல்லை. இத்தனைக்கும் இந்த தொகுதியின்எம்.எல்.ஏ.,வாக அமைச்சர் சாமிநாதன் உள்ளார்.