மாநகரில் இடம் பெயர் வாக்காளர்கள் அதிகம்! கணக்கெடுப்பு பணியில் நீடிக்கும் திணறல்
திருப்பூர்: 'திருப்பூர் நகரில், வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியில், ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும், 80 சதவீதம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்' என்ற உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளிகளில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர். தேர்தல் கமிஷன் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களாக, ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகித்து, அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்த முறை வரும் போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி செல்கின்றனர். ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூரை பொறுத்தவரை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்குவதில் பெரும் சிரமம் எதிர்கொள்கிறோம். உதாரணமாக, ஒரு பாகத்தில், 1,200 வாக்காளர்கள் வசிப்பதாக பட்டியலில் இருந்தால், அங்கு சென்று பார்க்கும் போது, 500 பேர் வரை தான் அடையாள காண முடிகிறது. மற்றவர்கள், வேறு இடங்களுக்கோ, ஊர்களுக்கோ சென்று விடுகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பதென்பது, சிரமமான வேலை. அவ்வாறு இடம் பெயர்ந்து செல்வோர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்வதுமில்லை. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், இப்பணி சவால் நிறைந்ததாகவே உள்ளது. இன்றைக்குள் (நேற்று) விண்ணப்ப படிவங்களை கொடுத்து முடிக்க வேண்டும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இதுவரை, ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து, 2 அல்லது, 3 ஆசிரியர்கள் தான் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், 80 சதவீத ஆசிரியர்களை, வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தன்னார்வலர்களை ஈடுபடுத்தலாமே
! வாக்காளர் கணக்கெடுப்பணி என்பது வரவேற்கதக்க விஷயம். அதேநேரம், அப்பணியில், ஆசிரியர்கள் மீது ஒட்டு மொத்த பணியையும் சுமத்தாமல், இப்பணியில் தன்னார்வலர்கள் மற்றும் படித்த வேலையற்ற இளைஞர்களை ஈடுபடுத்தி, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் வாயிலாக, இப்பணியை செவ்வனே செய்து முடிக்க முடியும். அதேநேரம், இப்பணியில் ஆசிரியர்கள் மட்டுமின்றி வருவாய்த்துறையினர், வங்கி, தபால் துறை உள்ளிட்ட, 12 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்கள் மீது மட்டும் தான், கவனம் செலுத்தப்படுகிறது; பிற துறை சேர்ந்தோர் இப்பணியில் ஈடுபவது இல்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.