தமிழகத்தின் 157 தாலுகாக்களில் நில ஆவண வரைவாளர் இல்லை ஆவண பராமரிப்பு பணியில் சுணக்கம்
திருப்பூர் : தமிழகத்தின், 157 தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் ஏற்படுத்தாததால், ஆவண பராமரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வருவாய்த்துறையின் ஓர் அங்கமாக செயல்படும் நில அளவைத்துறை, நிலப்பதிவுகள் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. தாலுகா தோறும், தலைமை நில அளவையாளர் தலைமையில், நில அளவைத்துறை இயங்குகிறது. அனைத்து வருவாய் கிராமங்களின் நில ஆவணங்கள், பதிவேடுகள், தாலுகா சர்வே அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள, 312 தாலுகாக்களில், புதிதாக உருவான தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. புதிய மாவட்டம் தோற்றுவிக்கவும், நிர்வாக வசதிக்காகவும், புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன; அந்தவகையில், புதிதாக உருவான, 157 தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லை.பட்டா உட்பிரிவு செய்வது, புதிய புல வரைபடம் தயாரிப்பது, நிலத்தை அளந்து வரைபடத்துடன் வழங்குவது என, நில ஆவண வரைவாளர் பணி அதிகம். நில ஆவண விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யவும், கணக்குகள் மாறுதல் செய்யவும், நில ஆவண வரைவாளர் பங்களிப்பு அவசியம்.மாநில அளவில், 157 தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லை; இப்பணிகளை, மற்ற அலுவலர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். புதிய பணியிடத்தை தோற்றுவிக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில நிலஅளவை கணினி வரைவாளர் ஒன்றிப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லாததால், வரைவாளர் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. நில ஆவணங்கள் பராமரிப்பிலும் குறைபாடு ஏற்படுகிறது. அனைத்து தாலுகாவிலும், நில ஆவண வரைவாளர் பணியிடத்தை ஏற்படுத்தி, பணி நியமனம் செய்ய வேண்டும்.சேலம், நீலகிரி, தஞ்சாவூர், அரியலுார் மாவட்ட தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்தை ஒப்படைப்பு செய்ய வேண்டும். வரைவாளர், அளவர் பணியிடங்களை ஒருங்கிணைத்து சமமான பதவி உயர்வு வாய்ப்பு உருவாக்க வேண்டும். பதவி உயர்வு அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு நில ஆவண வரைவாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.காலியாக உள்ள, நில அளவைத்துறை இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் (தொழில்நுட்பம்), உதவி இயக்குனர் (வரைவு), உதவி இயக்குனர் (பொது) பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்துள்ளோம். பட்ஜெட் கூட்டத்தில், இதுதொடர்பான அறிவிப்பு வருமென நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.