அரும்பொருள் யாதொன்றும் இல்! காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவு; விளைவுகளை அலசும் இயற்கை ஆர்வலர்
திருப்பூர்; காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்வதால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதால், கேரளா போன்று, காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக, தமிழக அரசும் அனுமதி வழங்கி, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சாதக, பாதகம் என்ன?
சுற்றுச்சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம்:காடுகளில் நோய் வாய்ப்பட்டு இறந்து, அவற்றின் உடல் அழுகும் நிலைக்கு வரும் போது, மற்ற விலங்குகள் அதை சாப்பிட போது, அவற்றை பன்றிகள் உண்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தும். இறந்த விலங்குகளில் இருந்து பரவும் தொற்று, பிற விலங்குகளுக்கு பரவாமல் தடுக்கும். காடுகளில் இறுகிக்கிடக்கிற மண்ணை தோண்டி, கிழங்கை, தன் முன் பற்களால் தோண்டியெடுக்கும் போது, அந்த மண் இளகுவாகும். மழை காலத்தில் அல்லது மண் ஈரமான சமயத்தில் ஏதாவது ஒரு பறவை, அந்த மண் மீது எச்சமிடும் போது அதில் இருந்து ஒரு மரம் முளைக்கிறது. எனவே, காட்டை சுத்தமாக வைத்திருப்பது, காட்டை பரப்புவது என இரு சூழல் பங்களிப்பை காட்டுப்பன்றிகள் செய்து வந்தன.அடர்த்தியான, பரந்த காடுகள், சுருங்கிப் போன பிறகு, காடுகளுக்குள் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் வந்த பின், பன்றிகளின் வாழ்விடங்கள் சிதறடிக்கப்பட்டது, அவை நகரம் துவங்கி, சோலைக் காடுகள் வரையிலும் பரவி விட்டன. நகரம் மற்றும் தோட்டங்களுக்கு அருகில் வாழ்ந்து பழகிய பன்றிகள், அங்கேயே வாழ்விடமாக்கிக் கொண்டன. இதுதான் வேளாண் மக்களின் துயரமாக மாறிவிட்டது. பன்றிகளால் நிறைய பயிர் சேதம் ஏற்படுகிறது.அதன் விளைவாக 'காட்டுப்பன்றிகளை அழிக்க வேண்டும்' என்ற முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. இயற்கை அன்னை பல லட்சக்கணக்கான உயிர்களை படைத்து, அதை மாலையாக கழுத்தில் அணிந்திருக்கிறது.அந்த உயிரின தொகுப்பு அடங்கிய மாலையில், ஒரு உயிரினும் உதிர்ந்தாலும், அந்த சங்கிலி அறுபடும். எனவே, காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லும் அரசு முடிவில், வனத்துறைக்கே அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அதே நேரம் உணவுச்சங்கிலி உடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.