திருமுறை இசை கச்சேரியுடன் தேர்த்திருவிழா
திருப்பூர்; நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் ஆனித்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருமுறை இசைக்கச்சேரி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், புராதன பழமை வாய்ந்தது; நெடுங்காலமாக இருந்த கோவிலை, 400 ஆண்டுகளுக்கு முன், திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்தியுள்ளனர்.வேறு எங்கும் இல்லாதபடி, மத்தியில் விசாலாட்சி அம்மன் சன்னதியும், வலதுபுறம் விஸ்வேஸ்வரர் சன்னதியும், இடதுபுறம் முருகப்பெருமான் சன்னதியும் அமைந்துள்ளது.அதாவது, திருமண விழாவில் மணமக்கள் அமர்வது போல், ஆணுக்கு வலது புறம் பெண் அமர்வது போல், விஸ்வேஸ்வரருக்கு வலப்புறம் விசாலாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருவது சிறப்பு.அதன்காரணமாகவே, நீண்ட நெடுங்காலமாக, திருமணத்துக்கு பெண் பார்க்கும் நிகழ்வை, நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் நடத்தி, திருமணம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.அத்தகைய புகழ்பெற்ற நல்லுார் கோவிலுக்கு, தேர்த்திருவிழா கொண் டாட முடிவு செய்து, பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தேர் வடிவமைக்கப்பட்டு, வெள்ளோட்டம் முடிந்துள்ள நிலையில், முதன்முதலாக, ஆனித்தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.வரும், 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது; உற்சவமூர்த்திகள் திருவீதியுலா சென்று அருள்பாலிக்க, புதிய காட்சி வாகனங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. வரும், 8 ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு சிறப்பாக நடைபெற உள்ளது; 10ம் தேதி மாலை தேரோட்டம் நடக்க உள்ளது.முதன்முதலாக நடக்கும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆன்மிக சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும், 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, உடுமலை அய்யாசாமி குழுவின் திருவாசக இசை கச்சேரி; 7ம் தேதி இரவு, 'அவன் அருளாலே அவன்தான் வணங்கி' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் சிவக்குமாரின் சொற்பொழிவு நடக்கிறது.வரும், 8ம் தேதி 'நமச்சிவாயவே ஞானமும், கல்வியும்' என்ற தலைப்பில் அவரது சொற்பொழிவு நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, திருஎறும்பியூர், திருஎரும்பீஸ்வரர் கோவில் ஓதுவார் முருகானந்தத்தின், திருமுறை இன்னிசை கச்சேரி நடக்க உள்ளது.வரும், 13ம் தேதி மாலை, கவிநயா நாட்டியப்பள்ளியின், 'மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாட்டிய நாடகம் நடைபெற உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அருள்செல்வன் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.