தாகம் அங்கே; வீணாகிறது இங்கே! போராட தயாராகும் மக்கள்
உடுமலை : பிரதான குழாய் உடைந்து நீண்ட நாட்களாகியும் சீரமைக்கப்படாமல், வீடுகளுக்கு முன் குளம் போல், தண்ணீர் தேங்கி நிற்பதால், கொங்கல்நகரம் கிராம மக்கள் போராட தயாராகி வருகின்றனர்.குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம், புதுப்பாளையம், அனிக்கடவு, விருகல்பட்டி ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.திட்டத்தின் கீழ், பொட்டையம்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் திட்ட பிரதான குழாய் அடிக்கடி உடைந்து விடுகிறது.சில வாரங்களுக்கு முன், கொங்கல்நகரம் பஸ் ஸ்டாப் அருகே ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சீரமைக்கவில்லை.இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது. நேற்று காலை பிரதான குழாய் உடைப்பு பெரிதாகி வெளியேறும் தண்ணீரின் அளவு பல மடங்கு உயர்ந்தது.கால்வாயில் செல்வது போல, வீணான குடிநீர் ரோட்டோரத்தில் சென்று, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அருகிலுள்ள வீடுகளின் முன், தேங்கி நின்றது.அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல ஊராட்சிகளில், குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஆனால், கொங்கல்நகரத்தில் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.வீடுகளின் முன் பல நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ளதால், நன்னீர் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் தொடர் அலட்சியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.