திருமுருகநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முற்றுகை; வியாபாரிகள் தீர்மானம்
அவிநாசி; அவிநாசி நான்கு ரத வீதிகள் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நாரசா வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற வியாபாரிகள் கூறியதாவது:'அவிநாசி பேரூராட்சி க.ச., எண் 85 டி மற்றும் இ, இவற்றில் உள்ள அனைத்து சொத்துகள் மீதும் எந்த பரிவர்த்தனையும் செய்யக்கூடாது'' என திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தடங்கல் நமூனா அளித்துள்ளார். இந்த எண்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துகளை வங்கியில் அடமானம் வைப்பதற்கோ, கல்வி கடன் பெறுவதற்கோ, சொத்தை விற்பதற்கோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்காக கூட பணம் பெற முடிவதில்லை.கோவில் செயல் அலுவலர் விமலாவிடம் பல முறை தெரிவித்தும் மெத்தனமாக உள்ளார்.கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை அதன் உண்மை ஆவணங்களை வருவாய்த்துறையினரிடம் சமர்ப்பித்து நிலத்தை கையகப்படுத்தி தர செயல் அலுவலர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.85 டி, இ என சொத்துக்கள் குறிப்பிட்ட புல எண்களை மட்டும் குறிப்பிடாமல், நான்கு ரத வீதிகளில் உள்ள வியாபாரிகள், வணிக வளாக உரிமையாளர்கள், வீடுகள் என அனைத்து சொத்துகளுக்கும் தடையாணை வழங்கியுள்ளதை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஏப்., 1ம் தேதி திருமுருகன்பூண்டி செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் அவிநாசி நான்கு ரத வீதியில் உள்ள வியாபாரிகள், சொத்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.