பல்லடம்: ''திருவள்ளுவரே இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்,'' என, கேத்தனுாரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. தேசிய மருத்துவ அமைப்பு சார்பில், இலவச மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், பல்லடம் அருகே, கேத்தனுாரில் நடந்தது. டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிகோபால் வரவேற்றார். டாக்டர்கள் தர்மேந்திரா, பாலகிருஷ்ணன், ராஜாராம், நந்தகோபால், ஸ்ரீதேவி, யோகலட்சுமி, வித்யா, கார்த்திக், ராமப்ரியா மற்றும் இயற்கை விவசாயி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் பேசியதாவது: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோயாகும். இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதாலோ அல்லது தடை ஏற்படுவதாலோ சர்க்கரை நோய் உருவாகிறது. இது ஒரு அமைதியான கொலையாளி. சரியாக பராமரிக்கவில்லை எனில், வாதம், மாரடைப்பு, கண் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும். முறையாக பராமரித்தால், இது ஒரு நோயே அல்ல. இன்று மருத்துவமனைகளில், 60 சதவீதம் பேர், சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். வெள்ளை சர்க்கரையால், சர்க்கரை அளவு, 500க்கும் மேல் சென்றாலும் தெரியாது. எனவே, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மிக முக்கியம். திருவள்ளுவரே இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர். 'அற்றால் அறவழிந்து உண்க..' என்று பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் கூறியுள்ளார். ஒருவருக்கு, ஒரு கைப்பிடி சோறு, இரண்டு கைப்பிடி காய்கறிகள், ஒரு விரலளவு எண்ணெய் ஆகியனவே போதுமானது. இவ்வாறு அவர் பேசினார். கோவை கங்கா மருத்துவமனை, குளோபல் ஆர்த்தோ மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் உள்ளிட்டவற்றின் சார்பில், அதன் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் முகாமில் பங்கேற்றனர்.