டைடல் பார்க் திறப்பு; 600 பேர் பணிபுரியலாம்
திருப்பூர்; திருப்பூரில் 'டைடல் பார்க்' கட்டுமானப்பணி, பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளை கடந்து, நேற்று திறப்பு விழா கண்டது.தகவல் தொழில்நுட்ப துறையில், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் நோக்கில், மாநிலத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில், 'மினி டைடல் பார்க்' அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,' திருப்பூர், சேலம், தஞ்சை, துாத்துக்குடி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்' என, கடந்த, 2022 மார்ச் மாதம், அப்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்தார். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களின் சந்திப்பு பகுதியாகவும், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு சென்று வருவது எளிது என்பதாலும், கோவை - சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய இடம் தேர்வு செய்யப்பட்டது. அவ்வகையில், அவிநாசி - திருப்பூருக்கு இடையில், திருமுருகன்பூண்டியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப சவால்களை கடந்து, கட்டுமானப்பணி நிறைவு பெற்றது, நேற்று திறப்பு விழா கண்டது. முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார். டைடல் பார்க்கில், தொழில் துறை அமைச்சர் ராஜா குத்துவிளக்கேற்றினார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், பூண்டி நகராட்சி தலைவர் குமார் உட்பட டைடல் பார்க் அதிகாரிகள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.மொத்தம், 39.44 கோடி ரூபாய் செலவில், 65,379 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உட்பட, 8 அடுக்கு கட்டடமாக 'டைடல் பார்க் நியோ' உருவெடுத்துள்ளது. ஏழு நிறுவனங்கள் செயல்படும் வகையில் வடிவமைப்பு உள்ளது. ஏறத்தாழ, 600 பேர் வரை அமர்ந்து பணிபுரிவதற்குரிய உட்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.