திருப்பூர் நிறுவனம் மீது ரூ.1 கோடி மோசடி புகார்
திருப்பூர்: ஜவுளி தயாரிப்பு இயந்திரம் தருவதாக கூறி, தமிழகம் முழுதும், 1 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக, திருப்பூர் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. திருப்பூர், ஓடக்காடை சேர்ந்த தனியார் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு கோன் வைண்டிங், பனியன் துணியிலிருந்து நுால் பிரித்தெடுக்கும் இயந்திரங்களை வழங்குவதாகவும், தயாரிக்கப்படும் நுாலை விலை கொடுத்து கொள்முதல் செய்வதாகவும் அறிவித்திருந்தது. தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர், சுய தொழில் ஆர்வத்தில், இந்நிறுவனத்திடமிருந்து இயந்திரங்கள் வாங்க பணம் செலுத்தினர். ஒவ்வொருவரும், 2 -- 3 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். தொகையை பெற்றுக்கொண்ட நிறுவனம், இயந்திரங்களை அனுப்பாமலும், நுாலை கொள்முதல் செய்யாமலும் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம், விழுப்புரம், தர்மபுரியை சேர்ந்த 12 பேர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் புகார் அளித்தனர்.