உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர் தொடரும் பசுமை பயணம்; 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

வனத்துக்குள் திருப்பூர் தொடரும் பசுமை பயணம்; 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையிலும், வெற்றி அமைப்பு சார்பில், கடந்த, 2015ல் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் துவங்கியது.மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக துவக்கப்பட்ட இத்திட்டத்தில், தொழில் துறையினர், பசுமை ஆர்வர்கள், விவசாயிகள் ஒத்துழைப்பு காரணாக, கடந்த, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தால், அணை கரைகள் ,பொது இடங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோவில், பள்ளி வளாகங்கள் என அரசுக்கு சொந்தமான நிலங்கள் பசுமையாக மாறியுள்ள நிலையில் ,குறுங்காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.விவசாயிகளுக்கு மரம் சொந்தம்; துாய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம் என்ற அடிப்படையில், மரச்சாகுபடி திட்டமாக விவசாய நிலங்களிலும் இத்திட்டத்தின் கீழ், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.தொடர்ந்து பசுமை பரப்பும் இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது பணிகள் துவங்கியுள்ளன.நடப்பாண்டு திட்டத்தின் கீழ், உடுமலை அருகேயுள்ள கணபதிபாளையத்திலுள்ள விவசாயி ரமேஷூக்கு சொந்தமான நிலத்தில், 590 பாக்கு, 870 மகா கனி என, 1,460 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.அதே போல், செஞ்சேரி புத்துாரிலுள்ள டாக்டர் பூங்கோதைக்கு சொந்தமான நிலத்தில், 100 தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எலையமுத்துாரிலுள்ள, சித்ராதேவி- கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தை சுற்றிலும், இயற்கையான சீதோஷ்ண நிலை மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் வகையில், மகாகனி, சொர்க்கம், இலுப்பை, தேக்கு, புளி, பலா என, 240 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், கோவில் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.மரக்கன்றுகள் நடவு செய்து, மரமாக வளர்த்து, பசுமை வளர்க்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ