உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர் கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை திருப்பூர் சாதனை: அமைச்சர் சுப்பிரமணியம்

உயர் கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை திருப்பூர் சாதனை: அமைச்சர் சுப்பிரமணியம்

அனுப்பர்பாளையம்; ''அரசுப்பள்ளிகளில் உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கையில், திருப்பூர் சாதனை படைத்துள்ளது'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார். -பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாள் விழா, திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளியில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பேசியதாவது: அரசு பள்ளிகளில் முதல்வர் கொண்டு வந்த சிறப்பு திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் வந்த பிறகு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லாததால், பள்ளிகள் மூடப்பட்டு கொண்டிருந்த காலம் மாறி உள்ளது. அரசு பள்ளியின் தரம் உயர்ந்துள்ளது. இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 29 சதவீதம்; தமிழகத்தில் உயர் கல்விக்கு செல்வோர் 53 சதவீதம். திருப்பூர் அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை 97 சதவீதமாக உள்ளது. இது பெரும் சாதனை; இந்திய கல்வி துறை வரலாற்றில் பெரிய புரட்சி. பெரும்பான்மையினருக்கு குடல் புழு தொற்று, மண் மூலம் பரவுகிறது. சுத்தமாக இருக்க வேண்டும். வருடம் இருமுறை ஒரு வயது குழந்தை முதல் 19 வயதினர் இருபாலரும், 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களும் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். இதுவரை 2 கோடியே, 68 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார். கேள்விகளுக்கு பதில் மாணவர்களுக்கு பரிசு நிகழ்ச்சி தொடங்கியதும் பள்ளி மாணவர்களிடம் உலக கை கழுவுதல் நாள் எது; அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்துகிற சிறப்பு திட்டங்கள் எவை என இரு கேள்விகளை அமைச்சர் சுப்பிரமணியம் கேட்டார். சரியான பதில் கூறிய இரு மாணவர்களுக்கு மேயர் தினேஷ்குமார், தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ