திருப்பூர் இமாலயா - பூமலுார் பள்ளி அபாரம்
பல்லடம்; பல்லடத்தில் நடந்த ஐவர் பூப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில், திருப்பூர் இமாலயா அணியினரும், மாணவியருக்கான பிரிவில், பூமலுார் அரசு பெண்கள் பள்ளி அணியினரும் கோப்பையைக் கைப்பற்றினர்.பல்லடம் பூப்பந்தாட்ட குழு சார்பில், 11ம் ஆண்டு ஐவர் பூப்பந்துப் போட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட, 35 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், திருப்பூர் இமாலயா அணி, 35:28 என்ற புள்ளி கணக்கில், சாவக்கட்டுப்பாளையம் அணியை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்தது. இதேபோல், மாணவியருக்கான பிரிவில், பூமலுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அணியினர், 35:29 என்ற புள்ளி கணக்கில், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர்.பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் கண்ணையன், பூப்பந்தாட்ட குழு நிர்வாகிகள் ஷேக் மக்துாம், சுரேஷ் கண்ணன், வெங்கிடுபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றுகளை வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, பூப்பந்தாட்ட குழு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.