மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி; சாலைப்பணியாளர் சங்கம் எதிர்ப்பு
உடுமலை; தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, சுங்கச்சாவடிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என சாலைப்பணியாளர் சங்க கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின், 6வது கோட்ட மாநாடு, உடுமலை அரசு ஊழியர் சங்கத்தில் நடந்தது. கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார். மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், பொருளாளர் தமிழ், மாநிலச் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்,சாலைப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு முறைகேடு இல்லாமல், தமிழக அரசு சார்நிலை பணியமைப்பு விதிகளை பின்பற்றி, உடனடியாக தாராபுரம் கோட்டத்தில் தகுதி வாய்ந்த சாலைப்பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்குரிய கருவிகள், தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். அரசு விதிக்கு முரணாக அலுவலகம் உள்ளிட்ட மாற்றுப்பணிகளுக்கு சாலைப் பணியாளர்களை பயன்படுத்தாமல், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்கு அனுப்ப வேண்டும். சாலைப்பணியாளர்கள் 2 பேருக்கு, 8 கிலோமீட்டர் என்று சாலைத்தொகுதி நிர்ணயம் செய்யவும்,வாகனம் வழங்க வேண்டும். தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக, கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி, செயலாளர் தில்லையப்பன், பொருளாளர் சிவராஜ், துணைத்தலைவர்கள் தங்கவேல், செல்வகுமார், இணைச் செயலாளர்கள் மணிமொழி, பொன்னரசு, மாநில செயற்குழு உறுப்பினராக ஜெகதீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.