உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாகுபடி பரப்பு குறைந்தும் விலையில் தொய்வு அதிர்ச்சியில் தக்காளி விவசாயிகள்

சாகுபடி பரப்பு குறைந்தும் விலையில் தொய்வு அதிர்ச்சியில் தக்காளி விவசாயிகள்

உடுமலை;தக்காளி சாகுபடி பரப்பு மற்றும் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலை எதிர்பார்த்த அளவு உயராததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. வீரிய ஒட்டு ரக விதைகளால், உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுக்கள் வாங்கி, விவசாயிகள் நடவு செய்து வந்தனர்.தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிப்பால், உடுமலை சந்தைக்கு வரத்தும் அதிகரித்து, பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்யும் மையமாக, உடுமலை மாறியது.இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழைகள் ஏமாற்றிய நிலையில், கடந்த இரு மாதமாகவும் மழைப்பொழிவு இல்லாமல், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால், உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துள்ளது.கிணற்று நீரை ஆதாரமாகக்கொண்டு, ஒரு சில விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதிலும், நோய்த்தாக்குதல், செடிகள் பாதிப்பு, காய் பிடிக்காதது என மகசூல் பாதிப்பும் ஏற்படுகிறது.இதனால், வழக்கமான வரத்தை விட, சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ள நிலையில், விலையும் உயராததால், விவசாயிகள் அதிச்சியடைந்துள்ளனர்.கடந்த சில மாதமாகவே, 14 கிலோ கொண்ட பெட்டி, 150 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், வருவாயை எதிர்பார்த்து சாகுபடி செய்த தக்காளி விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பாலதண்டபாணி கூறியதாவது:தக்காளி சாகுபடியில், விதை முதல் பறிப்பு வரை, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, மருந்து செலவினங்களும் அதிகரித்துள்ள நிலையில் வெயில் காரணமாக, நடவு செய்த தக்காளி செடிகளில், 40 சதவீதம் வரை, பல்வேறு காரணங்களினால் காய்ந்து வீணாகி வருகிறது.வழக்கமாக, 60 நாட்களில், காய்ப்பு தொடங்கி, 90 நாட்கள் வரை மகசூல் இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நோய்த்தாக்குதல், தரமற்ற விதைகள் என பல்வேறு காரணங்களினால், இரு முறை மட்டுமே பறிக்க முடிகிறது.வழக்கமாக, ஏக்கருக்கு ஆயிரம் பெட்டி வரை உற்பத்தி இருந்த நிலையில், தற்போது, 300 முதல், 400 பெட்டிகள் வரை மட்டுமே காய்ப்பு உள்ளது.வறட்சியால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தும், விலை உயராமல் உள்ளது. இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, விலை சரிவின் போது விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, தக்காளி சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும்.மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், வியாபாரிகள், கமிஷன் மண்டி உரிமையாளர்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை உருவாக்குதல் என, தக்காளி சாகுபடியை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ