களைகட்டியது தக்காளி அறுவடை சீசன்; உருவானது தற்காலிக சந்தைகள்
உடுமலை; உடுமலை பகுதிகளில், தக்காளி அறுவடை சீசன் துவங்கிய நிலையில், நகராட்சி சந்தை மட்டுமின்றி, கிராமங்களிலும் தற்காலிக சந்தைகள் உருவாகியுள்ளன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து, கடந்த, மே - ஜூன் மாதங்களில் அதிகளவு தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் வரை தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அறுவடை துவங்கி, வரத்து அதிகரித்துள்ளது. உடுமலை நகராட்சி சந்தை மட்டுமின்றி, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் கிராமப்பகுதிகளிலும், தற்காலிக தக்காளி சந்தைகள் அதிகளவு உருவாகியுள்ளன. உடுமலை பகுதியில், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டிகள், நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில், தக்காளி சாகுபடி குறைந்த நிலையில், கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் தக்காளி பெட்டி கொண்டு வரும் வாகனங்கள், கொள்முதல் செய்து, பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் என சந்தை ரோட்டில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. தக்காளி வரத்து அதிகரித்தாலும், தேவை அதிகரிப்பு காரணமாக விலை சீராக நிலவி வருகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 550 ரூபாய் வரை விற்பனையாகிறது. விவசாயிகள் கூறியதாவது: மே மாதம் துவங்கி, தொடர்ந்து நடவு, அறுவடை என தக்காளி பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால், உடுமலை பகுதியில், ஆக., துவங்கும் தக்காளி வரத்து சீசன், டிச., வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது வரத்து அதிகரித்தாலும், ஓ ரளவு விலை கிடைத்து வருகிறது. உழவு, நாற்று நடவு, உரம், மருந்து என சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, தக்காளி வரத்து அதிகரித்து விலை சரியாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலை சரிவை தடுக்க, இருப்பு வைக்கும் குளிர்பதன கிடங்கு, தக்காளி சாஸ், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.