தக்காளி விலை கிடுகிடு உயர்வு
திருப்பூர்:குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது வரத்து குறைவால் திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், 'ஐந்து கிலோ 100 ரூபாய்' என வீதி வீதியாகக் கூவி விற்ற ஆட்டோக்களும், ரோட்டோரக் கடைகளும் தற்போது மாயமாகியுள்ளன. விலை நிலவரம்: உழவர் சந்தை: கிலோ 34 - 36 ரூபாய்; வெளிச்சந்தை (சில்லறை): கிலோ 45 ரூபாய் வரை விற்பனை. தேர்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பினாலும், கடும் வெயில் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் மற்றும் உழவர் சந்தைகளுக்கு வரும் தக்காளியின் அளவு, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 டன் வரை குறைந்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் எங்களுக்குக் கட்டுப்படியாகும். தற்போதைய விலையில் வாங்கி, வாகனத்திற்கு டீசல் அடித்து ஊர் ஊராகச் சுற்றினால் நஷ்டம் தான் மிஞ்சும் என ஆட்டோ வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தக்காளி விலை உயர்வால், மற்ற காய்கறிகளின் விலையும் ஏறும் அபாயம் உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். --- விவசாயிகள் சோகம் பொங்கலுார்: கடந்த கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி சந்தைக்கு வந்தபோது, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி வெறும் 80 ரூபாய்க்கு மட்டுமே போனது. பறிப்புக் கூலி கூடக் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்தனர். தற்போது கார்த்திகைப் பட்ட அறுவடை முடிந்துவிட்ட நிலையில், மாசிப் பட்டத்துச் செடிகள் கோடை வெயிலில் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் வரத்து சரிந்து, வெளியூர் தக்காளியை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் 300 ரூபாய்க்கு விற்ற ஒரு பெட்டி தக்காளி, நேற்று 600 ரூபாயைத் தொட்டுவிட்டது. இனி வைகாசிப் பட்ட நடவு தொடங்கி, அதன் அறுவடை சந்தைக்கு வரும் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.