உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரயில்வே கேட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து ; நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

 ரயில்வே கேட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து ; நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக அரசு கலைக்கல்லுாரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஐ.டி.ஐ., பள்ளி, சமூக நீதி விடுதிகள் உள்ளன. மேலும், உடுமலை நகரின் தெற்கு பகுதியில், 15க்கும் மேற்பட்ட வார்டுகளில், பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகளவு காணப்படுகிறது. ரயில்கள் வரும் போது, இரு புறமும் பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை காணப்படுகிறது. மேலும், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் கூட, தளி ரோடு சென்று வர வேண்டியுள்ளது. அகல ரயில்பாதை மற்றும் மின் வழித்தடம் என ரயில்வே போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு ரயில் கடக்கும் போதும், நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. குறுகலாக உள்ள இடத்தில், வாகன ஓட்டுநர்கள் போட்டி போட்டு, கடக்க முயல்வதால், விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில், இப்பகுதியில் ரயில்வே வழித்தடத்தை கடக்கும் வகையில், கீழ் பாலம் மற்றும் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த பணிகளும் துவங்காமல், ராமசாமி நகர் வழித்தடத்திலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும், பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் ரயில்வே வழித்தடத்தை எளிதாக கடக்கும் வகையில், கீழ் பாலம் அல்லது மேம்பாலம் கட்ட, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dhinesh Kumar
நவ 13, 2025 13:36

இங்கு மேல்பாலம் கட்ட இடம் போதுமானதாக இல்லை. கீழ்பாலம் வேண்டுமானால் கட்டலாம் .அனால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். பாதை மாற்றம் ஒன்றே சரியான தீர்வாக இருக்கும்.


சமீபத்திய செய்தி