மேம்பால கட்டுமான பணி இழுபறி சந்திப்பு பகுதியில் நெரிசல்
உடுமலை : நான்கு வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் இழுபறியாக நடப்பதால், முக்கிய ரோடுகள் சந்திப்பில், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.பொள்ளாச்சியிலிருந்து உடுமலை வழியாக திண்டுக்கல்லுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், உடுமலை - திருப்பூர் மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகள் குறுக்கிடும் பகுதியில், மேம்பாலம் கட்டுமான பணிகள் இழுபறியாக நடக்கிறது.இதனால், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள், மாநில நெடுஞ்சாலைகள் சந்திப்பு பகுதியில், தற்காலிக பாதையை நோக்கி செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடப்பது தெரியாமல், வேகமாக வந்து, திரும்பும் போது விபத்துகள் ஏற்படுகிறது. போதிய எச்சரிக்கை பலகைகளும் அங்கு வைக்கப்படவில்லை.தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.