ஸ்தம்பிக்கும் போக்குவரத்து பல்லடம் ரோட்டில் அவலம்
திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோட்டில் உள்ள போக்கு வரத்து நெருக்கடி தினமும் சொல்ல முடியாத சிரமத்தை அப்பகுதியைக் கடந்து செல்வோருக்கு தினமும் அளிக்கிறது. மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கும் இந்த அவதி காட்டன் மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தைப் பேட்டை, வீரபாண்டி பிரிவு, நொச்சிபாளையம் பிரிவு என நீண்டு கொண்டே செல்கிறது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல ரோட்டை முழுமையாக விழுங்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. இது தவிர மத்திய பஸ் ஸ்டாண்ட் முதல் ரோட்டில் இருபுறமும் எந்த விதிகளையும் பொருட்படுத்தாமல் நேரம் காலம் எந்த வரையறையுமின்றி பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் ரோட்டில் செல்லும் வாகனங்களின் நகர்வை பெருமளவு பாதிக்கிறது. மார்க்கெட் கடைகள், கடை வீதி கடைகள், பிளாட்பாரக் கடைகள் என கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி இறக்க வரும் வாகனங்கள்; கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் இஷ்டம் போல் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் மற்ற வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமமும், அவதியும் நிலவுகிறது. பல நேரங்களில் 'ஒன்வே'யில் எதிர்திசையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு வழி ஏற்படுத்துகிறது. இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல்லடம் ரோடு போக்குவரத்து நெருக்கடிக்கு சிறிதளவு தீர்வாவது ஏற்படும்.