ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
-- நிருபர் குழு -: உடுமலை, வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று (4ம் தேதி) துவங்குகிறது. இதனை தொடர்ந்து வால்பாறை சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி, தாசில்தார் அருள்முருகன் தலைமையில் நடந்தது. பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் கோவிந்தராசு துவக்கி வைத்தனர். பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரது வீட்டிற்கும் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் செல்ல வேண்டும். 18 வயதுடைய அனைவரையும் கட்டாயம் வாக்காளர்களாக இணைக்க வேண்டும். அதற்கான விண்ணப்படிவம் - 6 வழங்க வேண்டும். பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டையை தவறாமல் குறிப்பிட வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் வீடுகளுக்கு செல்லும் போது வீடு பூட்டியிருந்தாலோ, வேலைக்கு சென்றிருந்தாலோ வேறு ஒரு நாளில் படிவம் வழங்க வேண்டும். மூன்று முறை சென்றும் வாக்காளர்களை சந்திக்க முடியாவிட்டால், அவர்களது பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யலாம். இவ்வாறு, பேசினர். முன்னதாக, பயிற்சியில் கலந்து கொண்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்பட்ட 'கிட்' வழங்கப்பட்டது. உடுமலை மடத்துக்குளம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் நிலை மேற்பார்வையாளர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி முகாமில், வாக்காளர் பதிவு அலுவலர் சதீஷ் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கினார். இரு பிரிவுகளாக, பிரித்து பயிற்சி வகுப்பு நடந்தது. மடத்துக்குளம் தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.