| ADDED : டிச 31, 2025 07:51 AM
உடுமலை: தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, உடுமலையில்இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு அரசு பள்ளி ஆசிரியர்கள் சார்பில், உடுமலையில் நடந்தது. இந்தபயிற்சி வகுப்பிற்கு, 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 59 மாணவ, மாணவியர் பங்கேற்று பயிற்சி தேர்வு எழுதினர். இது குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கையில், '2025 - 26ம் ஆண்டுக்கான வருவாய் வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு ஜன., பத்தாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் இலவசமாக பயிற்சி நடத்தப்படுகிறது. தேர்வு நடைபெறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை, 10:00 மணி முதல் நண்பகல், 1.15 மணி வரை இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படும்,' என்றனர். பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் செல்லத்துரை, ஈஸ்வரசாமி, சந்திரசேகரன் ஒருங்கிணைத்து நடத்தினர்.