வெற்றி நிச்சயம் திட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க பயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு
திருப்பூர்: தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறமுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அடுத்த மாதம், 3வது வாரம், 'நாட்டுக்கோழி வளர்ப்பு' பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி, 200 மணி நேரத்துக்குரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையாக, 6,000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில், மாநில அரசின் வாயிலாக, நேரடியாக வரவு வைக்கப்படும். விரல் ரேகை பதிவு மூலம் வருகை பதிவேடு பராமரிக்கப்படும். பயிற்சி முடிவில் தேர்வு வைக்கப்பட்டு, சான்றிதழும் வழங்கப்படும். தமிழக அரசின் வெற்றி நிச்சயம் இணைய தளம் மற்றும் பயிற்சி மையத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே, இப்பயிற்சியில் பங்கேற்க முடியும். மேலும், விபரங்களுக்கு, 0421 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.