உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேதாஜி மைதானத்தை விளையாட்டு மேம்பாட்டு துறைக்குமாற்றுங்க! விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

நேதாஜி மைதானத்தை விளையாட்டு மேம்பாட்டு துறைக்குமாற்றுங்க! விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை; உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில், நடைபயிற்சி பாதை உயரப்படுத்துவதால் மைதானத்தின் தளம் பள்ளமாகி வருகிறது.உடுமலை கல்பனா ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான, நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது.இங்கு நகரம் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள பள்ளி மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் பலரும் மைதானத்தை பயன்படுத்துகின்றனர்.பல பள்ளிகளில் மைதான வசதி இல்லாததால், மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விளையாட்டுப்போட்டிகள், பள்ளிக்கல்வித்துறையின் போட்டிகள், பல்வேறு சங்கங்களின் சார்பில், விளையாட்டுகளும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கூடைப்பந்து, கால்பந்து மற்றும் பல்வேறு விளையாட்டுக்களுக்கான தொடர் பயிற்சிகளும் இங்கு நடக்கிறது. இவ்வாறு உடுமலை சுற்றுவட்டார விளையாட்டு வீரர்களின் பயிற்சி களமாக இருக்கும் நேதாஜி மைதானம், மழை நாளில் முழுவதும் குளமாகி பயன்படுத்த முடியாமல் போகிறது.மைதானம் போதிய பராமரிப்பில்லாமல் இருப்பதால், விளையாடும் ஆடுகளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதுதவிர, மைதானத்தின் ஒருபகுதி உயரமாக மாற்றப்படுவதால், மற்ற பகுதி பள்ளமாகி விடுகிறது.மைதானத்தில் விளையாட்டுக்கு மட்டுமின்றி, நாள்தோறும் பலரும் நடைபயிற்சி செய்கின்றனர். இவ்வாறு நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் தன்னார்வலர்கள் வாயிலாக, மைதானத்தை சுற்றியுள்ள நடைபாதை முழுவதும் மணல் போடப்பட்டு சமன்படுத்தப்பட்டது.தற்போது மைதானத்தின் சுற்றுப்பகுதி உயரமாகியுள்ளதால், மழைநீர் தேங்குவதற்கு மேலும் எளிமையான சூழலாக மாறிவிட்டது.அதேபோல், மைதானத்தின் பல பகுதிகளில், முள்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் வெறும் கால்களில் விளையாடும் மாணவர்கள் பலரும் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றனர்.பலபேர் பயன்படுத்தும் மைதானம் முறையான பராமரிப்பு இல்லாமல், பாழாகி வருகிறது.விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:நேதாஜி மைதானத்தில் விளையாடும் தளம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களின் கனவை நிஜமாக்கும் இடமாக, இந்த மைதானம் உள்ளது.பல்வேறு போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இடவசதி இருந்தும் முழுமையான பராமரிப்பு இல்லை. தற்போதுள்ள பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மைதானம் மாற்றப்பட வேண்டும்.அதன் வாயிலாக, மைதானத்தை உயர் தரத்துக்கு மேம்படுத்த முடியும். அங்கு நடத்தப்படும் போட்டிகள், பயிற்சிகளை முறைப்படுத்துவதற்கும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் மைதானம் கொண்டுவரப்பட வேண்டும்.இவ்வாறு, தெரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ