ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்
பல்லடம்; பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பிரிவு அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, உயர் அழுத்த டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்க கம்பம் உருக்குலைந்துள்ளது. கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பத்தின் அடிப்பகுதி மற்றும் மேல் பகுதி என, இரண்டு இடங்களிலும் சேதமடைந்துள்ளது. டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டு மானாலும் கீழே விழலாம் என்ற ஆபத்தான நிலையில் ஊசலாடி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி டிரான்ஸ்பார்மர் இருப்பதாலும், அருகே, விளை நிலங்கள் உள்ளதாலும், பெரும் விபத்து அபாயம் உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போதே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, டிரான்ஸ்பார்மர் மாற்றி இருக்க வேண்டும். இவ்வளவு மோசமான நிலையில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தும், மாற்றாமல் இருப்பது ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. எனவே, உடனடியாக டிரான்ஸ்பார்மரை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.