உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலையேற்ற சுற்றுலா; பிரபலப்படுத்த திட்டம் 

மலையேற்ற சுற்றுலா; பிரபலப்படுத்த திட்டம் 

திருப்பூர்; 'ட்ரெக் தமிழ்நாடு' திட்டத்தில், மலையேற்ற பயணம் மேற்கொள்ள, வாய்ப்புள்ள இடங்களை பிரபலப்படுத்தும் முயற்சியில், சுற்றுலாத்துறை ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் நீண்ட காலமாகவே மலையேற்ற பயணங்கள் நடந்து வந்தன. ஆங்காங்கே உள்ள வனச்சரக அனுமதி பெற்றும், பெறாமலும் இதுபோன்ற பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனுமதி பெறாமல் மலையேற்றப்பயணம் செல்வோர் சில பாதிப்புகளை எதிர்கொள்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மலையேற்றப்பயண அனுமதியை தமிழக அரசு கட்டாயமாக்கியது. இதற்கென, கடந்தாண்டு, 'ட்ரெக் தமிழ்நாடு' என்ற பெயரில் பிரத்யேக இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வனம் சார்ந்த பகுதிகளில் மலையேற்ற பயணங்களுக்குச் செல்வோர், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மலையேற்றப் பயணங்களை மேற்கொள்ளலாம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்; அங்குள்ள இயற்கை காட்சிகள் என்ன என்பது போன்ற விரிவான தகவல், அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் குறைந்த இடங்களிலும் ஊக்குவிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில், மலையேற்றம் செல்வதில், இயற்கை விரும்பிகளும், மலையேற்ற வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம், திருப்பூர் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் குறைந்த மாவட்டங்களில், மலையேற்ற பயணம் செல்வதில், சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. அத்தகைய மாவட்டங்களில் உள்ள மலையேற்ற சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களும், 'ட்ரெக் தமிழ்நாடு' இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. மலையேற்ற பகுதிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா துறையினர், வனத்துறையினருடன் இணைந்து, மலையேற்ற சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ