உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம ஊராட்சிகளில் துாய்மைப்பணியில் சிக்கல்

கிராம ஊராட்சிகளில் துாய்மைப்பணியில் சிக்கல்

திருப்பூர்; 'கிராம ஊராட்சிகளில், காலை 6:00 மணி முதல், 12:00 மணி வரை துாய்மைப் பணியில் கவனம் செலுத்த வேண்டும்' என, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 265 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரசின் நலத்திட்டங்கள் கிராம ஊராட்சி மக்களை சரியான முறையில் சென்றடைவதை, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.பெரும்பாலான ஊராட்சிகளில் துாய்மைப் பணி திருப்திகரமாக இல்லை என்பது, அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. குறிப்பாக, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை சரிவர சேகரிக்கப்படாதது; குப்பைகள் ரோட்டோரம் கொட்டப்படுவது; குவியும் குப்பைகள் எரியூட்டப்படுவது போன்றவையே நிகழ்கின்றன.குடியிருப்புவாசிகள், காலை, 9:00 மணிக்கு மேல் தங்கள் வேலைக்கு சென்று விடும் நிலையில், குப்பைகளை பாலிதீன் கவரில் கட்டி, ரோட்டோரம் வீசிவிட்டு சென்று விடுகின்றனர் என்ற தகவலும், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே, கிராம ஊராட்சிகளில் உள்ள துாய்மைப் பணியாளர்கள், காலை, 6:00 மணி முதல், மதியம், 12:00 மணிக்குள் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். தினம் ஒரு குக்கிராமம் என, சுழற்சி முறையில் குப்பை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும்; ஊராட்சி செயலர்கள் இப்பணியை காலை, 8:30 மணிக்கு ஜி.பி.எஸ்., விவரத்துடன், மொபைல் போனில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார் என, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

சிக்கல் என்ன?

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் இல்லை. குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை இயக்க 'ஆபரேட்டர்களும்' இல்லை; அது பழுதானால், சரி செய்யவும் முடிவதில்லை; பேட்டரி விலை மிக அதிகம். சுழற்சி முறையில், வாரத்துக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் குப்பை அள்ளப்படும் நிலையில், அதே இடத்தில் தான் மீண்டும், மீண்டும் குடியிருப்புவாசிகள் குப்பைகளை கொட்டுவர்; அடுத்த ஒரு வாரத்துக்குள் அங்கு 'குப்பை மலை' உருவாகிவிடும். துாய்மைப் பணியாளர்களுக்கு 'மாஸ்க்', காலணி உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களும் போதியளவில் இல்லை.ஒவ்வொரு ஊராட்சியிலும் சொற்ப அளவு துாய்மைப்பணியாளர்களே உள்ளனர். ஊராட்சி அலுவலகத்துக்கு ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் யாரேனும் வரும் பட்சத்தில், அவர்களுக்கு டீ, காபி வாங்கித்தரவும், எடுபிடி வேலைகள் செய்யவும் துாய்மைப்பணியாளர்களையே பயன்படுத்தப்படும் சூழ்நிலை, பல ஊராட்சிகளில் உள்ளது.மாவட்ட உயரதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மட்டும், குறிப்பிட்ட ஒரு குக்கிராமத்தை சுத்தமாக வைத்து, 'கணக்கு' காண்பிக்கும் நிலைதான் இருக்கிறது. எனவே, திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பை முழு அளவில் மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், சுவர் இல்லாமல் சித்திரம் வரையும் நிலை தான் நீடிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ