திருப்பூர்: திருப்பூர் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களை, போலீசார் கைது செய்தனர். இதையறிந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பையை பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு, மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் அருகே, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியம்பாளையத்தில் உள்ள பயன்பாடு இல்லாத பாறைக்குழியில், மாநகராட்சி குப்பையை கொட்ட, நேற்று லாரிகள் சென்றன. இரண்டு லாரிகளில் இருந்த குப்பை கொட்டப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை சிறைபிடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 15 பேரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். இதையறிந்து, பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயகுமார், தி.மு.க., ஈரோடு மத்திய மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் கட்சியினருடன் சென்றனர். அங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். மக்களுக்கு ஆதரவாக திரண்ட, இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சு நடத்தினர். பின், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட, 15 பேரையும் போலீசார் விடுவித்தனர். அங்கு குப்பை கொட்டாமல் லாரிகளை திருப்பி அனுப்பிய பின், அனைவரும் கலைந்து சென்றனர். குப்பை விவகாரத்தில், மக்களுக்கு ஆதரவாக களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஒரே நேரத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுங்கட்சி எதிர்ப்பு ஏன்?
திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டும் விவகாரத்தில், திருப்பூர் தி.மு.க., மேயர் தினேஷ்குமாருக்கு எதிராக, இடுவாய் உள்ளிட்ட கிராம மக்கள் கடும் விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்நிலையில், வெள்ளியம் பாளையத்தில் நேற்று குப்பை கொட்ட வந்த லாரிகளை தி.மு.க., வினரே மடக்கி உள்ளனர். இந்த கிராமம் பெருந்துறை தொகுதியில் வருகிறது. சட்டசபை தேர்தல் நேரத்தில் ஓட்டு பாதிக்கும் என்பதால், திருப்பூர் ஆ ளுங்கட்சி நிர்வாகத்தை பற்றி யோசிக்காமல், ஈரோடு மாவட்ட தி.மு.க., வினர், உள்ளூர் கிராம மக்களுக்கு ஆத ரவாக களம் இறங்கி இருப்பதாக தெரிகிறது.