குப்பை கொட்ட சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்
திருப்பூர் : பொங்குபாளையத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் குப்பை கொட்டி நிரப்பும் பணி நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் கழிவுகள் வாகனங்கள் மூலம் இங்கு கொண்டு சென்று கொட்டப்படுகிறது.இப்பகுதியில் குப்பைகளை கொட்டினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் முன்னிலையில் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாமல், கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்த முடிவானது. நேற்று காலை இரு லாரிகளில் குப்பை கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.தகவல் அறிந்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், பெருமாநல்லுார் போலீசார் அங்கு விரைந்தனர். எதிர்ப்பு தெரிவித்த திரண்ட மக்களிடம் அவர்கள் பேச்சு நடத்தினர். சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைகள் கொட்டப்படும்; இது குறித்து கண்காணிக்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 10:00 மணி முதல் துவங்கிய இப்பிரச்னை பிற்பகல் 3:00 மணி வரை நீடித்தது.அதன்பின் பொதுமக்கள், தங்கள் பகுதியில் ஊர்க்கூட்டம் நடத்தி முடிவு செய்து தெரிவிப்பதாகவும், அது வரை குப்பை கொட்டக் கூடாது என்றும் ெதரிவித்தனர்.இந்த சம்பவம் காரணமாக நேற்று பொங்குபாளையத்தில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.