சுரங்க பாலம் பணி மும்முரம்; எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம்
திருப்பூர்; திருப்பூரில் அ.தி.மு.க., சார்பில், 1996ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை அமைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர்., சிலை 'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' கலவையில் செய்யப்பட்டது. யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் இருந்து, பார்க்ரோட்டை இணைக்கும் வகையில், குமரன் ரோட்டுக்கு கீழ் சுரங்கபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் சுரங்கபாலம் பணிக்காக, எம்.ஜி.ஆர்., சிலையை தற்காலிகமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., நிர்வாகிகள் கேட்டுக்கொண்டபடி, பணிகள் முடியும் வரை சிலையை அகற்றுவது என்றும், பணி நிறைவு பெற்றதும் அதே இடத்தில், சிலையை மீண்டும் வைக்க அனுமதிப்பது என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் முன்னிலையில், நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டது. 'பொக்லைன்' மூலம் சிலை எடுத்துச்செல்லப்பட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும், அதே இடத்தில், வெண்கலத்தில் சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.