போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.71 லட்சம் பறிமுதல்
அவிநாசி: அவிநாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தீபாவளி நெருங்கும் நிலையில், தமிழகம் முழுதும், பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், அரசு கலைக்கல்லுாரி அருகே பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் விசாரணை செய்தனர். அதில், கணக்கில் காட்டப்படாத, ஒரு லட்சத்து, 71 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அலுவலர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.