உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறிப்பு கூலிக்கும் கட்டுப்படியாகல... விளை நிலத்திலேயே வீணாகும் தக்காளி

பறிப்பு கூலிக்கும் கட்டுப்படியாகல... விளை நிலத்திலேயே வீணாகும் தக்காளி

பல்லடம்; பறிப்பு கூலிக்கும் கட்டுப்படியாக விலை காரணமாக, பல்லடம் அருகே, விளைவிக்கப்பட்ட தக்காளிகள், விளை நிலங்களிலேயே வீணாகி வருகின்றன . இல்லத்தரசிகளின் அன்றாட தேவைகளில் தக்காளி, வெங்காயம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான விவசாயிகள், இவற்றை பரவலாக சாகு படி செய்கின்றனர். இவற்றின் விலை உயர்வதும், பின், சரிவடைவதும் ஆண்டு தோறும் வாடிக்கையாக உள்ளது. விலை குறையும்போது, பொதுமக்கள் பயனடைகின்றனர். விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, சமீப நாட்களாக, தக்காளி விலை சரிவடைந்ததால், அதிகப்படியான குறு, சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டார பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட தக்காளி பழங்கள், விளை நிலத்திலேயே வீணடிக்கப்பட்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர் கூறியதாவது: சமீப நாட்களாக, 14 கிலோ கொண்ட டிப்பர் தக்காளி, 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தொழிலாளர் கூலி மற்றும் வேன் வாடகை என, 600 ரூபாய் பறிப்பு செலவு ஆகிறது. அதுவும், பறிக்க மட்டுமே முடியும்; டிப்பரை துாக்கி எடுத்து வைப்பதெல்லாம் முடியாது என, தொழிலாளர்கள் கறாராக கூறுகின்றனர். கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய யாரும் முன் வராததாலும், பறிப்பு கூலிக்கும் கட்டுப்படியாகாது என்பதால், விளைவித்த தக்காளி பழங்கள் பறிக்கப்படாமல் அப்படியே உள்ளன. வழக்கமாக எடுத்து செல்லும் வேன் டிரைவர்களிடம், நீங்களே பறித்துக்கொண்டு, டிப்பருக்கு, 50 ரூபாயாவது கொடுங்கள் என்று கூறினாலும், எடுத்துச் செல்ல யாரும் முன் வரவில்லை. கடந்த இரண்டு மாதத்துக்கு முன், 42 டிப்பர்கள் அனுப்பி, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், 4 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, 2 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளேன். இவை அனைத்தும் பறிக்கப்படாமல், விளை நிலத்திலேயே காய்ந்து, அழுகி வீணாகி வருகின்றன. இதனால், 35 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டிப்பர் ஒன்று, 300 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்தால்தான் கட்டுப்படியாகும். அரசுதான் இதற்கு ஏதாவது தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !