ஸ்டாலின் அங்கிள்... மாணவர்கள் கடிதம்
பல்லடம்; ''மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ரகங்களை அனுமதிக்க வேண்டாம்'' என, பல்லடம் அருகே நடந்த விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர், முதல்வருக்கு தபால் எழுதியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, அருள்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டு இயக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் பல்லடம் 'வனம்' அமைப்பு ஆகியவை இணைந்து, விதைகள் மற்றும் உணவுத் திருவிழா, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், பாரம்பரிய நெல் ரகங்கள், விதைகள், காய்கறிகள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவில், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ரகங்களை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏராளமான மாணவ, மாணவியர், முதல்வர் ஸ்டாலினுக்கு, தங்கள் கைப்பட தபால் எழுதினார். முன்னதாக, மரபணு மாற்றம் செய்யப்படும் நெல் ரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர், 'மக்களுக்கு ஆபத்தான மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ரகங்களை தமிழகத்தில் அனுமதிக்காதீர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்லுக்கு தடை விதித்து உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்' என, பல்வேறு வாசகங்களுடன் பள்ளி மாணவ, மாணவியர் தபால் எழுதியிருந்தனர். இவை அனைத்தும் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.