கார்பன் உமிழ்வு தடுக்க சாய ஆலைகளுக்கு உதவி யுனிடோ உறுதி
திருப்பூர்: 'சாய ஆலை துறையினர், கார்பன் உமிழ்வை தடுக்கும் தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி உதவி களை 'யுனிடோ'விடமிருந்து பெறலாம்,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் சாய ஆலைகளின் கார்பன் நீக்கத்துக்கு தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்கும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம், லீபெபிள் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். ஐடியா டெக் சாப்ட்வேர்ஸ் இந்தியா நிறுவன இயக்குனர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் மேம்பாட்டு அமைப்பின் (யுனிடோ) தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் தேபஜித் தாஸ் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக, யுனிடோ செயல்படுகிறது. இந்த அமைப்பு மூலம், இந்தியா முழுவதும் பல்வேறுவகை தொழில்நிறுவனங்களின் கார்பன் உமிழ்தலை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம், நச்சுக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனங்களில்ஆற்றல் தணிக்கை கார்பன் உமிழ்வை தடுப்பதற்கு முன்வரும் நிறுவனங்களில், முதல்கட்டமாக ஆற்றல் தணிக்கை நடத்தப்படும். நிறுவனங்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது; எந்தெந்த இடங்களில் ஆற்றலை சேமிக்க முடியும் என ஆய்வு நடத்தப்படும் அதனடிப்படையில், வீண டிக்கப்படும் மின் ஆற்றல், நீர் உள்ளிட்டவற்றை, மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்த தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கார்பன் நீக்கத்துக்கு சிறிய மாற்றங்கள் முதல் பெரிய அளவிலான புதிய தொழில்நுட்பங்களை நிறுவ வேண்டிவரலாம். நிறுவனங்களில், கார்பன் நீக்கத்துக்காக நிறுவ வேண்டிய தொழில்நுட்பங்கள், அனைத்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதோடு, தேவையான நிதி உதவிகளையும் 'யுனிடோ' வழங்குகிறது. நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகிறது. திருப்பூர் சாய ஆலைகள், பாய்லர்களில் தண்ணீரை கொதிக்கவைக்க நிலக்கரி, விறகு பயன்படுத்துகின்றன. மின் தேவையும் அதிகளவில் உள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை பயன்படுத்தலாம். சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவு வதற்கு, 'யுனிடோ' மூலம், திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது; இதுதவிர, மத்திய அரசு துறைகளிலிருந்து, வட்டி மானியமும் பெறமுடியும். இவ்வாறு அவர் பேசினார். திருப்பூர் பகுதி சாய ஆலை, சுத்திகரிப்பு மையத்தினர் பங்கேற்றனர்; தங்கள் கேள்விகளை 'யுனிடோ' அமைப்பினரிடம் கேட்டு, தெளிவு பெற்றனர்.