பராமரிப்பில்லாத உடற்பயிற்சி பூங்கா; உபகரணங்கள் வீணாகி வரும் அவலம்
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் உள்ள 'அம்மா' உடற்பயிற்சி பூங்காக்கள் முறையான பராமரிப்பில்லாமல் உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது.கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி பெறுவதற்கும், அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பூங்காவாகவும், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கிராம ஊராட்சிகளில் 'அம்மா' உடற்பயிற்சி பூங்காக்கள் துவக்கப்பட்டன.உடுமலை ஒன்றியத்தில், மக்கள் தொகை அடிப்படையில் போடிபட்டி மற்றும் பெரியகோட்டை ஊராட்சிகளில் துவக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது.பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதை தவிர, உடற்பயிற்சி செய்வதற்கான பல்வேறு உபகரணங்கள் கொண்ட கூடமும் பூங்காவில் அமைக்கப்பட்டது.ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின், பூங்கா முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. போடிபட்டி பூங்காவில், வேலை உறுதி திட்டத்தின் கீழ் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் உடற்பயிற்சி மையம் பூட்டிய நிலையில் உள்ளது.பெரியகோட்டை உடற்பயிற்சி பூங்காவில், உபகரணங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. பயிற்சி செய்வதற்கு விளையாட்டு வீரர்கள் பூங்காவை பயன்படுத்தினாலும் சேதமான உபகரணங்களால் அடிக்கடி காயமடைகின்றனர்.தற்போது மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், கிராமப்பகுதி இளைஞர்களுக்கான விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, மைதானம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஏற்கனவே உள்ள உபகரணங்களை பராமரிப்பதற்கும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.பெரியகோட்டை ஊராட்சியில் உள்ள, 'அம்மா' விளையாட்டு பூங்காவில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தும் வகையில் பராமரிப்பதற்கும், போடிபட்டி பூங்காவின் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும் ஒன்றிய நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல்
பி.டி.ஓ., சுப்ரமணியம் கூறுகையில், ''ஊராட்சிகளில் உள்ள அம்மா பூங்காவில், உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்துவதற்கு, ஊராட்சி நிர்வாகத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி கூடத்தில் சேதமடையும் உபகரணங்களை சீரமைப்பதற்கும் நிர்வாகத்துக்கு கூறப்பட்டுள்ளது. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் உபகரணங்களை பயன்படுத்தலாம்,'' என்றனர்.