நகராத பணிகள்... தீராத பிரச்னைகள்
திருப்பூர் மாநகரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனாலும், பல வார்டுகள் குறைபாடுகள்தான் தலைதுாக்கி நிற்கின்றன.குடிநீர், சாலை, சாக்கடை, தெருவிளக்கு என பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தான் கழிகின்றன. வாரந்தோறும் வார்டுகளில் உள்ள நிலைகளை தெள்ளத்தெளிவாக அலசுகிறது 'வாரம் ஒரு வார்டு' பகுதி. இந்த வாரம், 42வது வார்டு. வார்டு பகுதிகள்
மங்கலம் ரோடு விரிவு, கே.வி.ஆர்., நகர், செல்லம் நகர், அய்யன் நகர், கே.ஆர்.ஆர்., தோட்டம், வடக்கு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை, திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு உள்ளடக்கியது; 22,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சியாக இருக்கும் போதே சாலைகள் அமைய பெற்றிருந்தன. விரிவாக்கம் இல்லை
செல்லம் நகர் நால்ரோடு, மங்கலம் ரோடு, முருகம்பாளையம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம்; விரிவாக்கம் செய்ய வேண்டும். கண்டியம்மன் கோவில் அருகில் ரோட்டிலேயே மூன்று குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாற்று இடத்தில் வைக்க வேண்டும். செல்லம் நகர் பிரிவில் வளைவில் வாகனங்கள் வேகமெடுப்பதால், அடிக்கடி விபத்து நடக்கிறது; வேகத்தடையே இல்லை. கால்வாய் பணி இழுபறி
கே.வி.ஆர்., நகர் கிழக்கில் இருந்து ஜீவா காலனி செல்லும் வழியில் பாதாள சாக்கடை கால்வாய் பணி இழுபறியாக உள்ளதால், ஆங்காங்கே சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. ஓடையை ஒட்டிய பகுதி என்பதால், குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி வருவதில்லை. ரோட்டோரம் குப்பை தேங்கியிருப்பதை காண முடிகிறது.ஜீவா வீதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் பின்புறம் ஓடை பகுதிக்கு வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் வசிப்பவருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டும், இன்னமும் ஓடையை ஒட்டியே வசிக்கின்றனர். 6 நாளுக்கு ஒருமுறை குடிநீர்
வார்டில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னமும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படாத பகுதியில், மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. சுகாதாரமான குடிநீர் வழங்க, மூன்று இடங்களில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. அடிக்கடி குற்றச்செயல்கள்
மக்கள் நெருக்கடி நிறைந்த வார்டின் மையப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது; ஆனால், அடிக்கடி குற்றச் செயல்கள் நடக்கின்றன; போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.கதிரவன் ஸ்கூல் ரோடு, கே.டி.சி., ஸ்கூல் மெயின் வீதியில் கால்வாயில் அடைப்பு உள்ளது. முட்புதர் மண்டி சுத்தப்படுத்தாமல் அப்படியே மாதக்கணக்கில் விடப்பட்டுள்ளது. குப்பை கொட்ட வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலில் பிளக்ஸ் வைத்துள்ள இடத்திலேயே குப்பை தேங்கி கிடக்கிறது. ஓடைக்கு மூடு விழா
பல்லடத்தில் இருந்து சின்னக்கரை, முருகம்பாளையம் வழியாக வார்டுக்குள் ஜம்மனை ஓடை வந்து சேர்கிறது. பெருமழை பெய்த போது வெள்ளம் பெருக்கெடுத்து, மழைநீர் தன் வழிப்பாதையை தேடிக்கொண்டது.சமீபமாக பெரியளவில் மழை இல்லாததால், ஓடை முட்புதர் மண்டி விட்டது. இதை சாதகமாக்கிக் கொண்டு மூட்டை மூட்டையாக குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி ஓடையின் பாதி வரை மூடி விட்டனர். இன்னும் சில நாட்கள் இதே நிலை தொடர்ந்தால், ஓடை இருந்த இடம் தெரியாமல், மாறி விடும். தீர்க்கப்படாத10 ஆண்டு பிரச்னை
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி கூறியதாவது:நாதன் பேக்கரி பின்புற வீதி, சானிட்டரி சந்தில் பாதாள சாக்கடைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு கொடுத்தும் பதில் இல்லை.மேயர், கமிஷனர் நேரில் வந்து பார்த்து விட்டார்கள்; பத்தாண்டு பிரச்னை; ஆனால், இன்னமும் தீர்வு இல்லை.தண்ணீர் பற்றாக்குறை உள்ளது; வெயில் காலம் வர போகிறது.கே.டி.சி., ஸ்கூல் வீதி, பாளையக்காடு, அய்யன்நகர் ஐந்தாவது வீதியில் போர்வெல்களை ஆழப்படுத்த வேண்டும் என ஆறு மாதம் முன்பே கடிதம் கொடுத்தேன்.வார்டில் கழிவுநீர் கால்வாய் பணி நகராட்சியாக இருக்கும் போது மேற்கொண்டது; பராமரிப்பே இல்லை. அங்காங்கே கால்வாயை இடிந்து விழுந்துள்ளது. சரிசெய்ய நிதி ஒதுக்கவில்லை. ஒருங்கிணைந்த பணி இல்லை
மாநகராட்சி 'டேப் இன்ஸ்பெக்டர்' - ஜே.இ., - ஏ.இ., என மூவர் சேர்ந்து பணியாற்றுவது இல்லை. பாதாள சாக்கடை, குடிநீர், கால்வாய் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. முதலில் குடிநீர் குழாயை உடைக்கின்றனர்.மறுநாள் வேலைக்கு வருவோர் அது அவர்களது பணி; எங்களுக்கு இல்லை என நழுவி விடுகின்றனர். இணைந்து பணி மேற்கொள்ளும் பழக்கம் இல்லை. இதனால், ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு பணியும் ஒன்றரை மாதம் வரை தாமதம் ஏற்படுகிறது.'வரி போடுகிறீர்கள்; பணி மேற்கொள்கிறீர்களா?' என மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்; பதில் சொல்ல முடியவில்லை.பூங்காவா... நகர் நல மையமாகே.ஆர்.ஆர்., தோட்டம் மாநகராட்சி நகர் நல மையத்தில் கூடுதல் படுக்கையுடன் மருத்துவமனை விரிவுப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால், 'அம்ரூத்' பாரத் திட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்த பூங்கா உருத்தெரியாமல் மாறியுள்ளது. சறுக்கல், துாரி விளையாட்டுகள் உள்ள பகுதி முட்புதர் மண்டி காணப்படுகிறது. மருத்துவமனை விரிவாக்கம் அவசியம்; அதே நேரம், அருகிலேயே பூங்காவும் அமைய பெற்றால், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவர்.