இரவு நேரத்தில் அல்லல்படும் பயணிகள்: பஸ் போக்குவரத்து முறைப்படுத்த வலியுறுத்தல்
திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு ஊர்களுக்கு மக்கள் பயணமாகின்றனர். 'பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன' என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதில், கோவை, திருப்பூர் மற்றும் வழித்தட ஊர்களான அவிநாசி, தெக்கலுார் உட்பட பகுதிகளில் வசிக்கும் மக்கள், சேலம் வழியாக சென்னை, வேலுார், தர்மபுரி, ஒசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, திரும்புகின்றனர். இதில், இரவு துவங்கி அதிகாலை வரை சேலத்தில் இருந்து கோவைக்கு சில நிமிட இடைவெளியில் அரசு பஸ்கள் இயக்கப்படும் போதிலும், அவையனைத்தும், 'ஒன் டூ ஒன்' என்ற பெயரில், சேலத்தில் இருந்து நேரடியாக கோவைக்கு இயக்கப்படுகிறது. வழித்தடத்தில் உள்ள பவானி, பெருமாநல்லுார், அவிநாசி, தெக்கலுார், கருமத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படுவதில்லை; மாறாக, பைபாஸ் மார்க்கமாகவே கோவை சென்று விடுகின்றன. அதிகாலை, 4:00 மணிக்கு மேல் தான், அதுவும், ஓரிரு பஸ்கள் சேலத்தில் இருந்து இந்த வழித்தட மார்க்கமாக இயக்கப்படுகின்றன. இதே நிலை தான் ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் காணப்படுகிறது. இதனால், பெருமாநல்லுார், அவிநாசி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள ஊர்களுக்கு சென்று சேர வேண்டிய மக்கள், மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்களுடன் பயணிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது, தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் நிலையில், இரவு நேரங்களில் சீரான பஸ் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்.