உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டுறவு சங்க நிலத்தில் காய்கறி சந்தை; விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்க நிலத்தில் காய்கறி சந்தை; விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை ஏரிப்பாளையத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலத்தில் தினசரி காய்கறி சந்தை அமைக்கவும், விவசாயிகள் விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை ஏரிப்பாளையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில், உடுமலை நகராட்சி சந்தையில், காய்கறி கமிஷன் மண்டிகளில் நிலவும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு நூண்ணுாட்ட சத்துக்கள் முழு மானியத்தில் வழங்கவும், தென்னையை தாக்கும் வெள்ளை ஈ, கருந்தாழை புழு வாடல் நோய், வேர்ப்புழு, வேர் அழுகல் ஈரியோபைடு நோய்களிலிருந்து காப்பாற்ற அனைத்து விதமான தொழில் நுட்ப உதவிகளை வேளாண் துறை வழங்க வேண்டும். ஏரிப்பாளையத்திலுள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான இடத்தில், தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்கவும், விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உடுமலை உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யவும், முறைகேடுகளை தடுக்கவும், இந்த ரோட்டில் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், தனியார் கடைகள் அமைத்து, விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனையாகாமல் பாதிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகளின் தோட்டங்களில், தொடர்ந்து கேபிள், மின் வயர்கள் திருடப்படுவதை தடுக்கவும், தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக மோகன்ராஜ் செயலாளராக ஆனந்தன், பொருளாளராக முத்து செல்வராஜ், துணைத்தலைவராக ரஞ்சித் குமார், துணைச்செயலாளராக சின்னப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை