வியாபாரிகள் வருகை குறைவால் சரியும் காய்கறி விலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உடுமலை; உடுமலை சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக, காய்கறி விலைகள் குறைந்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பீட்ரூட், பொரியல் தட்டை என பல்வேறு வகையாக காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரள மாநிலம், மூணாறு, மறையூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.உடுமலை - மூணாறு ரோட்டில், இரு புறமும் காணப்படும் பள்ளம் காரணமாக, சரக்கு வாகன போக்குவரத்து பாதிப்பு, சந்தை வளாகத்தில் லாரிகள் நிறுத்த முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், வியாபாரிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு சில காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், வரத்து குறைவு காரணமாக ஒரு சில காய்கறிகள் விலை சீராக உள்ளளது.கேரள மாநிலத்திற்கு அதிகளவு கொள்முதல் செய்யப்படும் பொரியல் தட்டை, கடந்த வாரம், கிலோ ரூ. 40 வரை விற்றது. வியாபாரிகள் வருகை இல்லாததால், தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது.அதே போல், ரூ.40க்கு விற்று வந்த வெண்டை, ரூ.11 ஆகவும், ரூ. 25 வரை விற்று வந்த மாங்காய், ரூ. 10, கொத்தரவரங்காய், ரூ.35 லிருந்து, ரூ. 10 ஆகவும் குறைந்துள்ளது. சில காய்கறிகள் விலை அதிகரிப்பு
நிலையில்லாத விலை, சாகுபடி பரப்பு குறைவு காரணமாக, பிரதான காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், தற்போது விலை உயர்ந்து வருகிறது.நேற்று, மிளகாய், கிலோ ரூ.80 முதல், 90 வரையும், சுரைக்காய், ரூ. 7-8 வரையும், புடலங்காய், ரூ.25, பாகற்காய், ரூ.40-45 வரையும் விற்றன.கடந்த வாரம், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, ரூ.20 வரை விற்ற நிலையில், நேற்று ரூ. 380 ஆக உயர்ந்தது. கத்தரி, 20 கிலோ கொண்ட மூட்டை, ரூ.800க்கு விற்பனையானது.விவசாயிகள் கூறுகையில்,' கேரள மாநிலம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து வருகிறது. இதனால், உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரோட்டை சரி செய்வது, வாகனங்களை நிறுத்த சந்தையில் வசதி மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருவதை அதிகரிக்க, அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.