திட்ட சாலையில் திணறும் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் அவலம்
உடுமலை: திட்டச்சாலையில், தற்காலிக ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும், நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உடுமலை - தாராபுரம் மற்றும் பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், நகரின் நெரிசலான பகுதிக்குச்செல்லாமல், பழநி ரோட்டில் இணையும் வகையில், திட்டச்சாலை அமைக்கும் பணி சில ஆண்டுக்கு முன், நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, குறிப்பிட்ட தொலைவுக்கு நுாறடி திட்ட சாலை அமைத்து, சென்டர்மீடியனும் கட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டச்சாலை சென்டர்மீடியனை ஒட்டி, பழுது பார்க்கும் வாகனங்களை நிறுத்திக்கொள்வது, கழிவு பொருட்களை குவித்து வைப்பது என தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், கனரக மற்றும் இதர வாகனங்கள் திட்டச்சாலை வழியாக செல்ல முடிவதில்லை. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு இச்சாலையை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். சந்திப்பு பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னை குறித்து, நகராட்சி மற்றும் உடுமலை போலீசாரிடம் மக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதியில் கைவிடப்பட்ட திட்டச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டச்சாலை பணிகள் நிறைவேறினால், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் குறையும். இது குறித்து நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார், வருவாாய்த்துறை இணைந்து ஆலோசித்து பணிகளை துவக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.