சாகும் வரை உண்ணாவிரதம்; கிராம உதவியாளர் போராட்டம்
உடுமலை; உடுமலை தாலுகா அலுவலகத்தில், கிராம உதவியாளர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உடுமலை தாலுகா வாளவாடியை சேர்ந்தவர் திலீப், 35. முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில், கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த மதன்குமாருக்கும் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிரச்னை ஏற்பட்டு, போலீஸ் வழக்குப்பதிவு காரணமாக, கடந்த, 2024 அக்., 8ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி, விளக்கம் பெற்றனர். ஆனால், விசாரணை அடிப்படையில், மீண்டும் பணி வழங்காமலும், பிழைப்பு ஊதியம் வழங்காமலும் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.இதனைக்கண்டித்து, மே 1ம் தேதி, கிராம உதவியார் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில், மீண்டும் பணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.ஆனால், ஒரு மாதமாகியும் பணி வழங்காததோடு, பிழைப்பு ஊதியமும் வழங்காததால், கிராம உதவியாளர் திலீப், தாலுகா அலுவலகத்தில் நேற்று முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.திலீப் கூறுகையில், ''எங்கள் கிராமத்தை சேர்ந்தவர், என்னை சமூக வலைதளத்தில் தவறாக பரப்பியதால், நானும் கோபத்தில் எதிர்வினையாற்றினேன். அதற்கும், துறைக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், வேண்டும் என்றே, ஒரு சில அரசியல் பிரமுகர்கள் துாண்டுதல் காரணமாக, என்னை அதிகாரிகள் பழி வாங்கி வருகின்றனர். பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.