தெருவில் குப்பை எடுக்காமல் ஓட்டலில் கழிவு சேகரிப்பு
திருப்பூர்: திருமுருகன் பூண்டியில், குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை சேகரிக்காமல், தனியார் ஓட்டலில் கழிவுகளை எடுத்துச் சென்ற வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், பல்வேறு தெருக்களில்குடியிருப்பு பகுதிகளில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை.குப்பை சேகரிப்பு வாகனங்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்களில் தினமும் தவறாமல் சென்று குப்பை அகற்றும் பணியை இடைவெளியின்றி எல்லா நாட்களிலும் கழிவுகளை சேகரிப்பது மட்டும் வழக்கமாக உள்ளது.அவ்வகையில், நேற்று அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலின் பின்புற வாசல் வழியாகச் சென்ற ஒரு, நகராட்சி குப்பை வாகனம் அங்கு இருப்பு வைத்திருந்த குப்பை மூட்டைகளை அகற்றும் பணியைத் துவங்கியது.இது குறித்து தகவல் அறிந்து பொதுமக்கள் அங்கு திரண்டு, அந்த வாகனத்தைச் சிறைப்பிடித்தனர். துாய்மைப்பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் அங்கு சென்றனர். தகவல் அறிந்து போலீசார்அங்கு விரைந்தனர்.வீடுகள், தெருக்களில் குப்பை எடுக்காமல், தனியார் நிறுவனத்தில் குப்பை அகற்றுவது குறித்து கடுமையாக வாதிட்டனர். போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து, வாகனத்தை விடுவிக்க செய்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'தனியார் நிறுவனங்களுக்கு தரும் முன்னுரிமை பொதுமக்களுக்குத் தருவதில்லை. வீடுகள் முன் உள்ள குப்பைகளை சேகரிப்பதில்லை. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.