உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை

அவிநாசி; அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம், தெக்கலுார் ஊராட்சி, சூரிபாளையத்தில் நடந்தது. அந்தக்கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது: ஓராண்டாக அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கவுசிகா நதி வரை தெற்கில் உள்ள எட்டு ஊராட்சிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு போதுமான அளவில் தண்ணீர் வரவில்லை. இது குறித்து, ஈரோடு மற்றும் திருப்பூர் கலெக்டர்கள், அமைச்சர் முத்துசாமியிடமும் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. தற்போது பவானி மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கூட இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் 60 ஆண்டு கால போராட்டம் வீணாக போய் விடும். விவசாயம், நிலத்தடி நீர்மட்டம், தொழில்துறையினர் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் என அனைத்து வகையிலும் அதிகளவில் நீர் ஆதாரமாக விளங்கும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முடக்காமல், உடனடியாக எந்த ஒரு சூழ்நிலையிலும் காலதாமதம் ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும். அனைத்து குளம் குட் டைகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை என்றால், ஆக., 8ம் தேதி தெக்கலுாரில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பங்கேற்றார். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், தங்கவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆறுச்சாமி, நம்பியாம்பாளையம் சம்பத்குமார், நடராஜன், களஞ்சியம் சுப்பிரமணியம், கிராமிய மக்கள் இயக்கம் தொரவலுார் சம்பத்குமார், களம் அறக்கட்டளை சதீஷ்குமார், பொன்னுசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி கோபால், சின்னசாமி, விசைத்தறி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி