உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் திட்ட பிரதான குழாய் அமைக்கும் பணி; ரூ. 2.98 கோடி மதிப்பில் துவக்கம்

குடிநீர் திட்ட பிரதான குழாய் அமைக்கும் பணி; ரூ. 2.98 கோடி மதிப்பில் துவக்கம்

உடுமலை ; உடுமலை திருமூர்த்தி அணை தளி கால்வாயை, ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில், அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில், ரூ.2.98 கோடி மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி துவங்கியது.திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, தளி, குமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், சங்கராமநல்லுார் ஆகிய, 5 பேரூராட்சிகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களிலுள்ள, 318 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், தற்போதுள்ள பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டம், கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றை இணைத்து, மடத்துக்குளம் கூட்டுக் குடிநீர் திட்டம் மறு தொகுப்பு செய்தல் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களில் விடுபட்ட குடியிருப்புகளும் இணைக்கப்பட்டு, புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்திலுள்ள, 126 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, பிரதான குடிநீர் குழாய், பழமையான தொழில் நுட்பமான, சிமென்ட் கான்கிரீட் குழாயாக உள்ளது.இத்திட்டத்தின் கீழ், வாளவாடி, பூலாங்கிணர், அந்தியூர், ராகல்பாவி உள்ளிட்ட மேற்கு பகுதி கிராமங்கள், களிமண் பகுதியாக உள்ளதாலும், போக்குவரத்து அதிகமாக உள்ளதாலும் வாளவாடி பிரிவு முதல் வாளவாடி குடியிருப்பு வரை, பிரதான கிளை 18ல், 660 மீட்டர் முதல் 4,220 மீ வரை சுமார், 3,560 மீட்டர் நீளத்திற்கு குழாயில் அடிக்கடி உடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.இதனால், பயன்பெறும் கிராமங்களுக்கு, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், ரூ.2.98 கோடி மதிப்பீட்டில், நவீன முறையான, 350 மி.மீ., விட்டமுள்ள, நெகிழிரும்பு (டிஐ) குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்ட பணி துவக்க விழா வாளவாடியில் நேற்று நடந்தது. அமைச்சர்கள், சாமிநாதன், கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயலட்சுமி, செல்வராணி, பிரகாஷ், உடுமலை ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் காமாட்சி அய்யாவு, பி.டி.ஓ.,க்கள், சுரேஷ்குமார், சிவகுருநாதன், உதவி பொறியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாலை பணிகள் துவக்கம்!

கணக்கம்பாளையம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்பிலும், ஜெய்சக்தி நகர், ராய் லட்சுமி நகர், மாதா லே-அவுட், சாரதா லே - அவுட், எம்.ஜி.ஆர்., நகர், முத்து கோபால் லே-அவுட், வி.கே.பி., லே-அவுட். அருண் நகர் ஆர்.ஜி., நகர் காந்திபுரம் பகுதியில், ரூ.34 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.மேலும், எம்.ஜி.ஆர்., நகர். ராயல் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என, ரூ.1.5 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை