வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் நீர் வழிப்பாதை துார்வார எதிர்பார்ப்பு
திருப்பூர்; வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், திருப்பூரில் உள்ள நீர் வழிப்பாதைகள் துார்வாரி தயார்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அக்., துவங்கி டிச., மாதம் வரை வட கிழக்குப் பருவ மழை பெய்வது வழக்கம். அவ்வகையில் நடப்பாண்டிலும் இப்பருவ மழை துவங்கும் அறிகுறிகள் தென்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அவ்வகையில், திருப்பூர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேல் கன மழை பெய்தது. இதனால், நகரில் பல்வேறு ரோடுகளிலும் மழை நீர் வழிந்தோடியது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்கள், கழிவுகளால் நிரம்பி தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்துக் காணப்பட்டது. இதுபோன்ற தெருக்களில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து ரோட்டில் பாய்ந்து பெரும் அவதியை ஏற்படுத்தியது. மேலும், நொய்யல் ஆற்றிலும், நீரின் அளவு சற்று அதிகரித்தது. நொய்யலில் வந்து இணையும் சபரி ஓடை, சங்கிலிப் பள்ளம் மற்றும் ஜம்மனை ஓடைகளிலும் மழை நேரத்தில் நீர் அளவு சற்று அதிகரித்து காணப்படும். இந்த மழையின் போது ஆறு, குளம், குட்டைகளும், அணைகளும் நிரம்பி பாசனம், நிலத்தடி நீர் ஆதாரம் ஆகியவற்றுக்கு உதவியாக அமையும். இதனால், பருவ மழை துவங்கும் முன்னதாக அனைத்து நீர் வழிப்பாதைகள், ஓடைகள் துார் வாரப்படும். மழை நீர் எங்கும் தடையில்லாமல் அதன் பாதையில் கடந்து செல்லும். மேலும், தேவையற்ற இடங்களில் சென்று பாய்வதும், தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் மழை நீர் சென்று பாய்வதும், தேங்கி நிற்பதும் தவிர்க்கப்படும். திருப்பூரை பொறுத்த வரை, நொய்யல் ஆறும், அதில் இணையும் சபரி ஓடை, சங்கிலிப் பள்ளம், ஜம்மனை ஓடை, மந்திரி வாய்க்கால், சேனா பள்ளம், நல்லாறு ஆகிய நீர் வழிப்பாதைகள் மழையின் போது, மழை நீர் எங்கும் புகுந்து வீணாகாமல் முறையாகச் சென்று சேரும். மேலும், சாமளாபுரம் குளம், பள்ளபாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம், நஞ்சராயன் குளம், மண்ணரை குளம், மாணிக்காபுரம் குளம் ஆகியன மழை நீர் சேகரிக்கும் முக்கிய நீர் நிலைகளாகவும் உள்ளன. நீண்ட காலமாக பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டிருந்த நீர்நிலைகளும், நீர் வழிப்பாதைகளும் கடந்த சில ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இன்னும் உள்ளன. ஜம்மனை ஓடை, சபரி ஓடை, நல்லாறு என பல இடங்களில் முட்செடிகள், புதர்கள் மண்டியும், மண் மேடுகளால் சூழப்பட்டும் உள்ளன. நகரில் தாழ்வான பகுதிகளாகவும், குடியிருப்புகளை ஒட்டியும் உள்ள ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால், மழை நீர் முறையாகச் செல்ல முடியாமல், ஓடையில் வெளியேறியும், குடியிருப்புகளுக்குள் புகுந்தும் ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னதாக அவை முறையாக துார் வாரி சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.