அப்போது தேடிப்போனோம்; இப்போது தேடி வருகின்றனர்
''விவசாயம் செய்றவங்க முதற்கொண்டு, வியாபாரம் செய்ற பல பேரு, வியாபாரம் சரியில்ல; வருமானம் வர்றது இல்லைன்னு சொல்றதை தான் வழக்கமா வைச்சிருக்காங்க. ஆனா, பெரிய, பெரிய கார்ல வந்து இறங்குவாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேங்க. செய்ற வேலைக்கு காசு கிடைக்குது, அவ்ளோதான்...''இப்படி யதார்த்தமாய் பேசினார், குன்னத்துார், கம்மாளங்குட்டையில், மண்பாண்டம், கார்த்திகை தீப விளக்கு செய்யும் தொழிலில், கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வரும், 70 வயது முதியவர் ஆறுமுகம்.''எங்க அப்பா மண்பானை செய்ற வேலையை தான் செஞ்சுட்டு இருந்தாரு; நானும் சின்ன வயசிலேயே அந்த வேலையை கத்துக்கிட்டேன். அதுவே தொழிலாகிடுச்சு. ஆரம்ப காலங்கள்ல நிறைய பேரு இந்த தொழிலை செய்துட்டு இருந்தாங்க. இதனால, போட்டி அதிகமாக இருந்துச்சு. இப்போ, இந்த தொழிலை செய்தவங்ளோட வாரிசுங்க யாரும் இந்த வேலையை செய்றது இல்ல; வேற வேலைக்கு போயிடறாங்க. அப்போ எல்லாம், நாங்க கடை கடையாக போய் 'ஆர்டர்' எடுப்போம்; அந்தளவுக்கு போட்டி இருந்துச்சு. இப்போ, கடைக்காரங்க என்னை தேடி வந்து 'ஆர்டர்' தர்றாங்க. செய்ற வேலைக்கு காசு கிடைக்குது'' என்றார் மனநிறைவுடன்.'இந்த தொழில் உங்களுக்கு திருப்தியா இருக்கா?'நொடியும் யோசிக்காமல், ''ரொம்ப திருப்தியா இருக்கு; அழகான தொழில். உயிர்ப்பான ஒரு தொழில். நல்லபடியா கத்துக்கிட்டா, கை நிறைய காசு தர்ற ஒரு தொழில் தான்'' என்றார், நம்பிக்கை மிளிர. கார்த்திகை தீப திருவிழா அப்போ, நிறைய விளக்கு ஆர்டர் கிடைக்கும். அப்புறம் மாரியம்மன் கோவில் விழா சமயத்துல, பொங்கல் பானை ஆர்டர் கிடைக்கும்,'' என பதில் சொன்னார். சலிச்சு போனது தான் மிச்சம்
'அரசாங்க உதவி கிடைக்குதா? என கேட்டதற்கு, ''திருப்பூர் மாவட்டம் தனியா பிரிஞ்சப்போ எங்க சங்கம் ஈரோட்டை தலைமையிடமா கொண்டு செயல்பட்டுச்சு. மாவட்டம் பிரிஞ்சதுக்கு அப்புறம் சங்க செயல்பாடும் குழப்பமாகிடுச்சு. மழைக்காலத்துல மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தர்ற, 5 ஆயிரம் ரூபாய் நிதி, எனக்கு கிடைக்கிறது இல்ல. நலவாரிய உதவி வாங்க முழு தகுதி இருந்தும், அதுவும் வர்றதில்லே. பானை செய்ற சக்கரம் கூட எனக்கு அரசாங்கத்துக்கிட்ட இருந்து கிடைக்கல. நானும் கேட்டு, கேட்டு சலிச்சு போய் விட்டுட்டேன்'' என்றார் விரக்தியுடன்.காலச்சக்கரத்தில் கைவினைத் தொழில், காட்சிப் பொருளாக மாறி வருகிறது; கைவினைக் கலைஞர்கள் பலர், 'கட்டாய ஓய்வு' பெற்று, வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், தள்ளாத வயதிலும், தளராமல் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவரை போன்ற முதிய கலைஞர்களுக்கு, அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும்.