உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுமானப்பணி துவங்குவது எப்போது?

மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுமானப்பணி துவங்குவது எப்போது?

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி க்கு புதிய அலுவலக கட்டுமானப் பணி துவங்குவதில் கால தாமதம் நிலவுகிறது. தற்போதைய கவுன்சிலர்கள் பதவிக் காலம் முடியும் முன் புதிய வளாகம் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம், மங்கலம் ரோட்டில் அமைந்துள்ளது. நகராட்சியாக இருந்தது முதல் இந்த வளாகத்தில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சி எல்லை விரிவு படுத்தி, வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அலுவலகப் பயன்பாட்டு வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் கூட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய அலுவலகம், 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டு, திட்ட அனுமதி மற்றும் நிதி அனுமதி ஆகியன பெறப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிக்கான டெண்டர் கோரும் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் பணி உத்தரவு பிறப்பித்து, கட்டுமானப் பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது.புதிய அலுவலகம் கட்டுமானப் பணி எப்போது துவங்கும். புதிய அலுவலகம் கட்டி முடித்து அதில் கவுன்சிலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போதைய கவுன்சிலர்கள் மனதில் எழுந்துள்ளது. புதிய அலுவலகம் கட்டுமானப் பணி விரைந்து துவங்கி முடித்தால், இப்பதவிக் காலம் முடிவதற்குள் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.புதிய கட்டடப் பணி குறித்து மேயர் தினேஷ் குமார் கூறியதாவது:புதிய அலுவலகம் தாராபுரம் ரோட்டில், முன்னர் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்த, மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அமையவுள்ளது.அங்கு செயல்பட்டு வந்த மருத்துவமனை பிரிவுகள் இடம் மாற்றப்பட்டு விட்டது. தற்போது தொழுநோய் மற்றும் காச நோய் பிரிவுகள் மட்டும் அங்கு செயல்படுகிறது. அவற்றுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, செவிலியர் கல்லுாரி, மருத்துவ மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் ஒப்புதல் தரும் பகுதியில் அவை அமைக்கப்படும்.இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மிக விரைவில் அவை மாற்றப்பட்டு, இங்குள்ள கட்டடங்கள் இடித்து அகற்றி, புதிய அலுவலகம் கட்டும் பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ