உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் நொய்யல் நதி மீட்பு எப்போது? 

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் நொய்யல் நதி மீட்பு எப்போது? 

திருப்பூர்; நொய்யல் ஆற்று நீர் மாசடைந்துள்ள நிலையில், ஆற்றை புனரமைப்பது தொடர்பான திட்ட அறிக்கை, நீர்வளத்துறையினர் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.'நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், நொய்யல் ஆறு மேம்படுத்தப்படும் பணியை விரைவில் துவக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கோவையில் துவங்கி, 180 கி.மீ., துாரம் பயணித்து, திருப்பூர் வழியாக கரூர் வரை செல்லும் நொய்யல் ஆறு காவிரியில் கலக்கிறது. இதில், கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள நொய்யல் ஆற்றின் பல இடங்களில் குப்பைக்கழிவுகள் தேங்கி, ஆற்றுநீர் மாசுபட்டுள்ளது. சில, சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் விடுகின்றன.நொய்யல் நதி நீர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என பல்வேறு விவசாய அமைப்பினரும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது எரியூட்டி, சமாளிக்கின்றனர்.இதனால் எழும் பெரும் புகை, சுற்றியுள்ள மக்கள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே, நொய்யல் ஆற்றை மேம்படுத்துவது குறித்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.நீர் வளத்துறையினர் கூறுகையில், 'நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், நொய்யல் ஆற்றை முழு சுத்தம் செய்ய திட்ட அறிக்கை தயார் செய்து, மாநில அரசின் நிதித்துறை அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்பு பணி துவங்கும்.இதுதவிர நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து நொய்யல் ஆற்றில் குப்பைக் கொட்டப் படுவதை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை