துணைத்தேர்வு ரிசல்ட் எப்போது? தேர்வெழுதிய மாணவர்கள் திக் திக்
திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவியர், துணைத் தேர்வெழுதி, மேல் படிப்புகள் துவங்கிய நிலையில், 'ரிசல்ட்' எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில், மார்ச், ஏப்., மாதத்தில், நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியர் உடனுக்குடன் துணைத் தேர்வெழுதி இந்த ஆண்டே கல்லுாரியில் இணைவதற்கு வழிவகை செய்யும் வகையில், கடந்த மாதம், துணை தேர்வுகள் நடத்தப்பட்டன.துணைத்தேர்வு முடிவு தெரிந்த பின்னரே, கல்லுாரியில் இணைய முடியும் என்ற சூழலில், தேர்வெழுதிய மாணவ, மாணவியர் காத்துள்ளனர். இது குறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது: பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவ, மாணவியரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு, 'கவுன்சிலிங்' வழங்கி, உடனுக்குடன் துணைத் தேர்வெழுதி, கல்லுாரியில் இணைவதற்கான ஊக்குவிப்பு, அரசின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது. தனியார் கல்லுாரிகளில் இணைந்து படிக்க வசதி, இல்லாவிட்டாலும், அரசு கல்லுாரிகளில் படிக்க முடியும் என்பது போன்ற பல விஷயங்கள் குறித்து ஊக்குவிக்கப்பட்டது. இது, பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இச்சூழலில், கல்லுாரிகள் அனைத்தும் செயல்பட துவங்கிவிட்ட நிலையில், துணைத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், துணை தேர்வெழுதிய மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் மத்தியில் ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருத்தும் பணி தாமதம்
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொதுவாக, துணைத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு, ஜூலை, 3ம் வாரம் வெளியிடப்படும் என, தேர்வு சமயத்தில் அறிவித்திருந்தனர். ஆசியர்கள் கவுன்சிலிங் காரணமாக, சில மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி காலதாமதமாகி உள்ளது. இதனால், ரிசல்ட் தாமதமாகிறது. விரைவில் ரிசல்ட் வெளியாகும்' என்றனர்.