நோயாளியுடன் இருப்போர் யார்? ஆரஞ்ச், பிங்க், நீல நிறத்தில் பாஸ்
திருப்பூர் ; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர் யார் என்பதை அறியும் வகையில் ஆரஞ்ச், பிங்க், நீல நிறத்தில் 'பாஸ்'கள் வழங்கப்படுகின்றன. இந்த முறை கட்டாயம் பின்பற்றப்படும் என்று கூறுகிறார் டீன் முருகேசன்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் முருகேசன் கூறியதாவது:மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு, ஆரஞ்ச், பிங்க், நீலம் என ஒவ்வொரு வார்டுக்கு ஒரு பாஸ் வழங்கியுள்ளோம். 'டேக்' வழங்கப்படும் போது, அவற்றை நோயாளிகள் உடனிருப்பவர் கைகளில் கட்டுவது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும்.தற்போதைக்கு பாஸ் இருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் அனுமதிக்கப்படுவர்; மற்றவர்கள் உள்ளே செல்ல முடியாது.காலை, 6:00 - 8:00 மணி; மதியம், 12:00 - 2:00 மணி, மாலை, 4:00 - 6:00 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்படுவர்.விரும்பத்தகாத, தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நோக்குடன் மருத்துவமனைக்குள் யாரேனும் சுற்றித்தரிகிறார்களா என்பதை கண்டறிய, ஒப்பந்த பாதுகாவலர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சுழற்சி முறையில் அனைத்து வார்டுகளையும் கண்காணிக்கின்றனர். இவை தவிர, அனைத்து வார்டிலும் பெண் செக்யூரிட்டிகளும் பெண்களை கண்காணித்து, பரிசோதித்த பின்பே உள்ளே அனுப்புகின்றனர். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, டீன் முருகேசன் கூறினார்.